Thursday, January 15, 2009

மாட்டுப்பொங்கல் இடுவது ஏன்?


வாயில்லா ஜீவன்களில் மனித சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து நிற்பது பசு என்றால் அது மிகையில்லை. காலையில் எழுந்ததும் "பால் வந்து விட்டதா?' என்பது தான் நம் முதல் கேள்வியாக இருக்கிறது. அன்போடு வாஞ்சையாக ""அம்மா'' என்று பசு அழைக்கிறது. ஆனால், உண்மையில் நம் எல்லோருக்கும் பசுவே தாயாக இருந்து பால் தந்து காக்கிறது. பெற்ற தாய் கூட இரண்டு வயது வரை தான் பால் தருவாள். ஆனால், எத்தனை வயதானாலும் பசுவின் பால், மோர், தயிர், நெய் நம் உணவில் சேர்த்துக் கொள்ள மறப்பதில்லை.

வயதாகி சாப்பிட முடியாத நிலை வரும் போது, பசும்பால் மட்டுமே நமக்கு கைகொடுக்கிறது. உயிர் வெளியேறத் துடிக்கும் போது, குழந்தைகளெல்லாம் வாயில் பால் ஊற்றுகிறார்கள். இறந்த பிறகு சமாதியிலும் பால் ஊற்றுகிறார்கள். இப்படி பிறப்பு முதல் இறப்புக்குப் பிறகும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாயான பசுவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்திலேயே மாட்டுப்பொங்கல் இடப்படுகிறது. அதனால் தான் அதனை ""கோமாதா'' என்று அழைக்கிறோம்.பசுவுக்காக வாழ்ந்த சித்தர்: திருவாவடுதுறைக்குத் தெற்கே உள்ள சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்னும் இடையன் வாழ்ந்து வந்தான். தான் வளர்த்து வந்த பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தான். பசுக்களும் மூலன் மீது தன் அன்பைப் பொழிந்தன. ஒருநாள் காட்டில் மேய்ச்சலுக்கு சென்றபோது, ஒரு பாம்பு மூலனைத் தீண்டியது. அவன் இறந்து விட்டான். மூலனை விட்டுப் பிரிய மனமில்லாத பசுக்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி நின்றன. வான் வழியே சென்று கொண்டிருந்த சிவயோகியான சித்தர் ஒருவர் இக்காட்சியைக் கண்டு பசுக்கள் மீது இரக்கம் கொண்டார். பசுக்களின் கண்ணீரைத் துடைக்க எண்ணம் கொண்டார். "பரகாயப்பிரவேசம்' என்னும் கூடுவிட்டுக் கூடுபாயும் முறையில் மூலனின் உடம்பில் புகுந்தார். அதுவரை மூலனாக இருந்த அந்த உடல், சித்தரின் புனித சேர்க்கையால் ""திருமூலர்' என்ற பெயர் பெற்றது. அவர் புகழ் பெற்ற சித்தர் ஆனார். தன் மீது அன்புகாட்டிய மூலன் உயிர்த்தெழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. காலையிலிருந்து பசும்புல் உண்ணாமல் வாடி நின்ற பசுக்கூட்டங்களை திருமூலர் நீர் அருந்தச் செய்து, வயிறார மேயச் செய்து ஊர்போய் சேர்ந்தார். இவர் எழுதிய பாடல்கள் "திருமந்திரம்' என்று போற்றப்படுகிறது.

பசுக்குலத்திற்கே பெருமை: அப்பர் தேவாரத்தில் "ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்' என்று பாடுகிறார். "ஆ' என்றால் பசு; "அஞ்சாடுதல்' என்றால் "பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்தல்'. பஞ்சகவ்யம் என்பது பசுவிடமிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம்(பசுவின் ஜலம்), கோமயம்(பசுஞ்சாணம்) என்னும் ஐந்து பொருள்களும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்ந்த கலவையே பஞ்சகவ்யம் எனப்படும். இதுதவிர, பாலபிஷேகம், தயிர் அபிஷேகம், நெய்யபிஷேகம் என்று தனித்தனியாகவும் சிவபெருமானுக்குச் செய்வதும் உண்டு. திருவையாறு அருகிலுள்ள தில்லைஸ்தானம் என்னும் தலத்தில் இருக்கும் பெருமானுக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகும். தில்லைஸ்தானம் என்னும் இத்தலம் தேவாரத்தில் திருநெய்த்தானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பஞ்சகவ்யத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பசுக்குலத்திற்கே பெருமை என்று அப்பர் குறிப்பிடுகிறார். பால் அபிஷேகத்தை "கோசிருங்கம்' எனப்படும் பசுக்கொம்பினால் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

சாத்வீக உணவு: சாதுவான பிராணியான பசுவினைத் தெய்வமாகக் கருதி வழிபாடு செய்கிறோம். பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல் மனிதசமுதாயத்திற்கு மகத்தான உணவுப்பொருளாகப் பாலைத் தருகிறது. உணவு வகையில் சாத்வீகம் (சாந்தம்), ராட்சசம்(மிருகம்), தாம்சம் (மந்தம்) என்று முக்குணங்களை ஏற்படுத்தும் பொருள்கள் உண்டு. இதில் பசுவின் பால் சாத்வீக உணவாகும். பால் பசுவின் ரத்தம் என்பதால் அதுவும் அசைவம் தானே என்ற அபிப்ராயம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சாஸ்திரத்தில் பசும்பால் சாத்வீக உணவு என்றே குறிக்கப்பட்டுள்ளது. பாலைக் கொடுப்பதால் பசுவிற்கு ஹிம்சை எதுவும் இல்லை. அது நம் அறிவை துலங்கச் செய்கிறது. பல சாதுக்கள், பசும்பாலை ஆகாரமாகக் கொண்டு உதாரணமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். முக்குண உணவுகளைப் பற்றி விவரிக்கும் கீதையை போதித்த கிருஷ்ணர், ஆயர்பாடியில் பாலையும், வெண்ணெயையும் திருடிச் சாப்பிட்ட நவநீதகிருஷ்ணனாக இருந்திருக்கிறார்.

வெள்ளையைத் தேடி கருப்பு வரும்: நம் மனம் எல்லாம் வெள்ளை வெளேரென்று பாலினைப் போன்று இருக்கவேண்டும். அப்போது தான் கன்னங்கரேல் என்று இருக்கின்ற கிருஷ்ணன் நம்மை நாடி வருவான். "கார்வண்ணன்' என்றால் "மேகம் போன்று கருமையாக இருப்பவன்' என்று பொருள். எவ்வளவு கருமையாக மேகம் வானில் கூடுகிறதோ அதற்கு தகுந்தாற்போல மழை கொட்டும். அதுபோல, கண்ணன் நம் மீது அருள்மழை கொட்டுபவன். அவன் அப்படியே பசும்பாலை எடுத்துக் குடிப்பதில்லை. அது தயிராகி, அதிலிருந்து வெண்ணெய் எடுத்தால் அதை உண்ண விரைந்து வருவான். இதற்கு காரணம் என்ன தெரியுமா? வெள்ளை மனம் என்னும் பாலை, பக்தி என்னும் நெருப்பு கொண்டு காய்ச்சினால் அது பொங்கும். நெருப்பை அணைத்ததும் பொங்கிய பால் தணிவது போல, மனதின் உணர்ச்சி வேகத்தை அடக்கி, அதில் சாந்தம் என்னும் உறை ஊற்றினால், மனம் தயிர் போல கெட்டியாகி விடும். தயிரை மத்தினால் கடைந்தால் வெண்ணெய் ஊற்றெடுப்பது போல, கெட்டியான மனம் என்னும் தயிரை "கடவுளைப் பற்றிய ஒருமுகசிந்தனை' என்ற மத்தால் கடைந்தால் "பூரணத்துவம்' (மனிதனாகப் பிறந்ததே கடவுளை நிரந்தரமாக அடைவது என்ற நோக்கம்) என்ற வெண்ணெய் கிடைக்கும். நம் மனதுக்குள் கிடக்கும் பூரணத்துவம் ஆகிய வெண்ணெயை திருட கருமை நிறமுடைய கண்ணன் வருவான். அவனது அருள் கிடைத்ததும் நாம் அவனுடன் இரண்டற கலந்து விடுவோம்

நடமாடும் கோயில்: பசு இருக்கும் இடம் புனிதமானது. அதை நடமாடும் கோயில் எனலாம். பூஜையறையில் செய்யும் வழிபாட்டை விட, மாட்டுக்கொட்டிலைத் தினமும் சுத்தம் செய்து, அங்கு அமர்ந்து ஜபம் செய்யும் வழிபாட்டிற்கு கோடி மடங்கு பலனும், புண்ணியமும் கிடைக்கும். பசுவின் உடலில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் உள்ளனர். சகல புண்ணிய நதிகளும் அதன் உடம்பில் அடங்கியுள்ளனர். அதனால் பசுவே ஒரு நடமாடும் ஆலயம் போன்றதாகும். அங்கு செய்யப்படும் பிரார்த்தனை எல்லா தேவர்களையும் சென்றடையும். லட்சுமி வாசம் செய்யும் தலங்களான சுமங்கலியின் வகிடு, மலர்ந்த தாமரை, யானையின் தலை, வில்வதளம், பசுவின் பிருஷ்டபாகம்(பின்புறம்) ஆகிய ஐந்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காலை வேளையில் பசுக்கள் கிளப்பும் தூசி பட்ட காற்று மிகவும் உன்னதமானது. அதனால் அந்த பிரம்மமுகூர்த்த வேளையான அதிகாலைப் பொழுதை ""கோதூளி லக்னம்'' என்று குறிப்பிடுவர். தினபூஜைகள் நடத்தும் போது முதலில் பசுவிற்கு கோபூஜை செய்த பின்பே கஜபூஜை, சிவபூஜைகளைச் செய்ய வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது.

பசுக்களைப் பாதுகாப்போம்: பசுக்களைப் பாதுகாத்தால் நாட்டில் நன்மை உண்டாகும். பாவங்கள் விலகும். அமைதி பெருகும். உலகில் தர்மம் தழைக்க வேண்டுமானால் பசுக்களைப் பாதுகாப்பது அவசியம். தர்மதேவதையே தவம், தூய்மை, தயை, சத்தியம் என்னும் நான்கு கால்களைக் கொண்ட காளை வடிவில் தான் இருக்கிறது. கலிதோஷம் நீங்கி தர்மம் மீண்டும் உலகில் தலையெடுக்க வேண்டுமானால், கோபால கிருஷ்ணனை வழிபாடு செய்து, பசுக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் எல்லா தர்மங்களையும் தர்மருக்கு உபதேசிக்கும்போது, பசுவின் மகிமைகளைச் சொல்லி, அவற்றைப் பாதுகாக்கும்படி எடுத்துக் கூறுகிறார். பசுவைத் தானமாகக் கொடுப்பது மிகுந்த புண்ணியபலனைத் தருவதாகும். மாபாதகங்கள் தீர்க்கும் மாமருந்து என்றே இதைச் சொல்லலாம். ஆனால், தானம் பெறுபவர் அந்தப் பசுவை இறுதி வரை பாதுகாப்பவரா என்பதை உறுதி செய்தபின் தானம் செய்வது நல்லது. சியவன மகரிஷி பசுக் களைப் பற்றி,""எந்ததேசத்தில் பசுக்கள் தங்களுக்கு இம்சை நேருமோ என்று பயப்படாமல், கோகுலத்தில் நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின் றனவோ அந்த தேசமே எல்லாப் பாவங்களில் இருந்து விலகி ஒளியுடையதாய் பிரகாசிக்கும்,'' என்று குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment