Sunday, January 18, 2009

வயது ஒரு தடையே அல்ல... எதற்கு? - - வைரம் ராஜகோபால்


"நல்ல காரியம் செய்தவன் ஒருநாளும் கெடுவதில்லை என்பது பகவான் வாக்கு. மனிதன் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும். நல்ல காரியம் என்றால், பிறருக்கு பயன்படக் கூடியதான ஒரு காரியம். இதைப் பணத்தாலோ, பொருளாலோ, உடல் உழைப்பாலோ செய்யலாம்.


இப்போது செய்யப்படும் தானமோ, தர்மமோ... இப்போது பலன் அளித்தாலும் அளிக்கும் அல்லது வரும் ஜென்மாக்களிலும் அளிக்கலாம். வரும் சந்ததிகளுக்கும் கூட அந்த பலன் கிடைக்கலாம். தர்மம் என்றைக்காவது பலன் கொடுத்தே தீரும். குதிரை மீது ஏறி ஊரை சுற்றிப் பார்க்கப் போனான் ஒரு ராஜா. அப்போது, வயலில் தென்னங்கன்று ஒன்றை ஒரு வயதான கிழவன் நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.


அவர் அருகில் போய் குதிரையை நிறுத்தினான். "ஓய், பெரியவரே!' என்று கூப்பிட்டான். பெரியவர் எழுந்து ராஜாவை பார்த்து கும்பிடு போட்டு நின்றார். "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டான் ராஜா.


"இங்கே இரண்டு தென்னங் கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன் மகாராஜா!' என்று அவர் பதில் சொன்னார்.


உடனே, ராஜா சிரித்து விட்டு, "ஐயா! உமக்கோ வயது தொன்னூறு இருக்கும் போல் இருக்கிறதே! இந்த வயதில் தென்னங்கன்று நட்டு, அது காய்த்து தேங்காய் சாப்பிடலாம் என்று நினைக்கிறீர்களே! அதுவரையில் உயிர் வாழவும் ஆசைப்படுகிறீர்களே?' என்று கேட்டான். அதற்கு, அவர், "மகாராஜா, எனக்கு வயதாகி விட்டது என்பது தெரியும்; இந்தத் தென்னங் கன்றுகள் வளர்ந்து காய் காய்ப்பதற்கு இன்னும் பல வருஷங்கள் ஆகும் என்பதும் எனக்குத் தெரியும். அதுவரை நான் இருப்பேனா என்பதும் சந்தேகம் தான்.


"ஆனால், இந்தத் தென்னங் கன்றுகளை எனக்காக நடவில்லை. இந்தத் தென்னங் கன்றுகள் மரமாகி, பலன் தரும்போது என் பிள்ளைகள், பேர பிள்ளைகளும் அனுபவிப்பர். அவர்களுக்காகத்தான் இதை நடுகிறேன் ராஜா!' என்றார்.


சந்தோஷப்பட்டான் ராஜா. வரும் சந்ததியினருக்காக இப்போதே இவர் இப்படி ஒரு ஏற்பாடு செய்கிறாரே என்று மகிழ்ச்சியடைந்து, ஒரு பை பொற்காசுகளை அவரிடம் கொடுத்தான்.


அதாவது, இப்போது ஏதோ ஒரு நல்ல காரியம் செய்து விடு. அது தானமாகவோ, தர்மமாகவோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இதனுடைய பலன் யாருக்கு, எப்போது கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டிராதே! அதன் பலன் கொடுக்க வேண்டிய காலத்தில், யாருக்கு கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு கொடுத்து விடும்.


மனிதன் மனிதனை ஏமாற்றுவதுண்டு; தர்மம் என்றுமே ஏமாற்றாது. பலனைக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment