Sunday, January 18, 2009

சத்தியத்தைக் காப்பாற்றுவோம்! - செ.ஆகாஷ்ராஜ்


தில்லையம்பலம் எனப் படும் சிதம்பரத்தில் வசித்தவர் திருநீலகண்டர். மண்பாண்டத் தொழிலாளியான இவர், சிவனடியார்களுக்கு திருவோடு செய்து வழங்கி வந்தார். "திருநீலகண்டம்' என்று சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார். திருமணம் ஆகி மனைவியுடன் இனிய இல்லறம் நடத்தி வந்தார்.

ஒருமுறை, ஒரு பொது மாதுவைப் பார்த்த நீலகண்டர், அவளிடம் மனதைப் பறிகொடுத்து விட்டார். அவள் இல்லத்தில் தங்கியிருந்தார். இந்த விஷயம், நீலகண்டரின் மனைவிக்குத் தெரிந்து விட்டது.


"நானிருக்க, இன்னொரு பெண்ணைத் தொட்ட உம்மை இனி எந்நாளும் தொட மாட் டேன்; நீரும் என்னைத் தொடக் கூடாது. இது திருநீலகண்டனாகிய சிவபெருமான் மீது ஆணை...' என்று சொல்லி விட்டாள். இறைவன் மீதே ஆணையிட்டுச் சொன்ன பிறகு, அவளுடன் பெயரளவுக்கே இல் லறம் நடத்தி, வாழ்நாளைக் கழித்து விட்டார் நீலகண்டன்.


இந்த தம்பதியர் முதுமையையும் அடைந்து விட்டனர். ஒரு துறவியின் வடிவில் அந்த வீட்டிற்கு வந்த சிவபெருமான், தன் திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்தார்.


"மகனே! இது மிகவும் விலை உயர்ந்தது. இதில் ஒருமுறை பிச்சையிட்டு விட் டால், அன்று முழுக்க அதில் இருந்து உணவு வரும். எனக்கு மட்டுமின்றி, பிற சிவனடியார்களுக்கும் இந்த உணவு பயன்படுகிறது. இதை பத்திரமாக வைத்திரு. நான் வெளியூர் செல்கிறேன். திரும்ப வந்து பெற்றுக் கொள்கிறேன்!' என்று ஒப்படைத்தார்.


நீலகண்டரும் அதை வாங்கி பத்திரமாக வைத்தார். சில நாட் களில் அதை மறையச் செய்த சிவபெருமான், மீண்டும் வந்து திருநீலகண்டரிடம் திருவோட் டைக் கேட்டார். அது காணாமல் போனதை வருத்தத்துடன் சொன்ன நீலகண்டரை, நம்பாதவர் போல சிவபெருமான் நடித்தார். "நீ பெரும் ஆசைக் காரன். நீ தான் என் திருவோட் டைத் திருடிவிட்டாய்...' என்று திட்டித் தீர்த்தார். தான் அந்த ஓட்டை திருடவில்லை எனச் சொல்லிக் கதறினார் நீலகண்டர்.

"அப்படியானால் உன் மனைவியின் கரத்தைப் பற்றி கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி சத் தியம் செய்...' என சிவன் சொல்ல, தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்தும், தன் மனைவியை தொட முடியாமல் இருப்பது குறித்தும் சிவனிடம் சொன்னார் நீலகண்டர்.


அவரிடம் ஒரு கம்பைக் கொடுத்த சிவபெருமான், கம் பின் இரு நுனிகளையும் பிடித்து நீரில் மூழ்குமாறு உத்தரவிட்டார். இருவரும் அவ்வாறு செய்யவே, முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். கரையில் நின்ற துறவியைக் காணவில்லை. பின்னர், ரிஷப வாகனத்தில் சிவபார்வதி அவர்கள் முன் காட்சி தந்தனர்.

சிவன் மீது செய்த சத்தியத்தைக் காப்பாற்ற, மனைவியை வாழ்நாள் முழுவதும் தொடாமல் வாழ்ந்தமைக்காக நீலகண்டரைப் பாராட்டிய அவர்கள், தம்பதியர் மீண்டும் ஒற்றுமையாக வாழ ஆசியளித் தனர். அவரது குருபூஜை தை மாத விசாகத்தன்று நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment