1680ல் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா திருத்தல யாத்திரை செய்யும் போது, சமயபுரத்தில் தங்கினார். அன்றிரவு அம்பிகை அரசரின் கனவில் தோன்றி, ஒரு புன்னைக் காட்டில் புற்றுவடிவில் தான் இருப்பதாகவும், தன்னை வழிபடும்படியும் கூறி மறைந்தாள். அரசரும், அவள் குறிப்பிட்ட இடம் வந்து புற்றுவடிவில் இருந்த அம்மனைக் கண்டு, மேற்கூரையும் அமைத்தார். அத்துடன் இத்தலத்திற்கு "புன்னைநல்லூர்' என பெயரிட்டு, அந்த கிராமம் முழுவதையும் கோயிலுக்கு தானமாக வழங்கினார்.
பார்வை தந்த பார்வதி: துளஜா என்ற ராஜாவின் புதல்விக்கு அம்மை நோய் ஏற்பட்டு பார்வை போனது. அம்மன் பக்தரான இவரது கனவில், குழந்தை வடிவில் தோன்றிய அம்பிகை, புன்னைநல்லூர் வந்து வழிபடும்படி கூறி மறைந்தாள். மன்னரும் அதன்படி செய்தார். மகளுக்கு பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ந்த மன்னர், மேற்கூரையை மாற்றி விட்டு, பெரிய அளவிலான கோயில் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார்.
கோயில் திருப்பணி: சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது. மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்கள். சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார்.
அபிஷேக முறை: மூலவர் புற்று மண்ணால் ஆனதால், அபிஷேகம் கிடையாது. அதற்குப் பதிலாக தைலக்காப்பு சாத்தப்படுகிறது. மூலவர் அருகிலுள்ள விஷ்ணு துர்க்கைக்கும், உற்சவ அம்மனுக்கும் அபிஷேகம் உண்டு. ஐந்து வருடத் திற்கு ஒருமுறை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அம்பாளுக்கு தைலக்காப்பு செய்யப்படும். அப்போது, அம்மனை ஒரு வெண்திரையில் வரைந்து அதில் ஆவாஹனம் செய்து, ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) பூஜை செய்யப்படுகிறது. தைலக்காப்பில் இருக்கும் காலத்தில் உஷ்ணத்தால் பாதிக்காமல் இருக்க இளநீர், தயிர் நைவேத்யம் செய்யப்படுகிறது. அத்துடன் மூலஸ்தானத்தை சுற்றி அமைக்கப் பட்டுள்ள உள்தொட்டி, வெளித்தொட்டி இரண்டிலும் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது. கோடையில் அம்மனின் முகத்திலும், தலையிலும் முத்து முத்தாக வியர்வை தோன்றி மறைவதை இப்போதும் காண முடிவது கலியுக அதிசயம். இதனால் இவளை "முத்து மாரியம்மன்' என்றும் சொல்வர்.
பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்தது.
பிரார்த்தனை: அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மூலஸ்தானத்தில் உள்ள உள் தொட்டி, வெளிதொட்டிகளில் நீர் நிரப்பி அம்மனை வழிபாடு செய்கின்றனர். கட்டி, பரு உள்ளவர்கள் இங்குள்ள வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுகிறார்கள். குளத்தில் வெல்லம் கரைவது போல இவை கரைந்து விடும் என்பது நம்பிக்கை. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வியாபார செழிப்பு வேண்டுபவர்கள் ஆவணி ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகிறார்கள்.
திருவிழா: ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, நவராத்திரி.
திறக்கும் நேரம்: காலை 5- இரவு 9 மணி. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 3- இரவு 11 மணி.
No comments:
Post a Comment